Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

Archive for January, 2012

திருகோணமலையில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் சம்பவம்

திருகோணமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்களால் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இரவு 7 மணியளவில் 30 ற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஒன்று திரண்டு வீதிகளில் பயணித்தவர்கள் வீடுகளுள் தங்கியிருந்தவர்களென பலரையும் தாக்கியுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்களை தடுக்க முற்பட்டவேளை மகன் மற்றும் தந்தை இருவரையும், தாக்குதலில் ஈடுபட்டிருந்த அனைவரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரின் மத்திய பேருந்து நிலையப்பகுதியில் குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி அவர்கள் சென்று அந்தக் குழுவினரை விரட்டியடித்தனர். எனினும் எவரும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

30

01 2012

பாடசாலை மாணவர்கள் ஐவரை ஊர்வலமாக ஏற்றிச் சென்று அவமானப்படுத்திய மூவர் கைது!- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மீராவோடைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் ஜந்து பேர்களை வாகனமொன்றில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வீடொன்றில் வளர்த்து வந்த புறாக்களை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை, குறித்த வீட்டு உரிமையாளர் அடியாட்களின் உதவியுடன் பொலிஸாரின் அனுமதியின்றி கைது செய்து துன்புறுத்தி, உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாகவும் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அறிந்து பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

30

01 2012

பதின்ம வயது மாணவி துஸ்பிரயோகம்! நஞ்சருந்திய நிலையில் மாணவியின் தாத்தா கைது!- மீசாலையில் சம்பவம்

மீசாலையைச் சேர்ந்த பதின்ம வயது மாணவி ஒருவரை நேற்று முன்தினம் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, அம்மாணவியின் அவரது தாத்தாவை (வயது 65) சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

மீசாலையில் வசிக்கும் குறித்த மாணவி தனது தாயின் தந்தையாடன் வசித்து வருகிறார். சம்பவ தினமன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர் மாணவியைத் துஷ்பிரயோகம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துஸ்பிரயோகத்திற்குள்ளாப்பட்ட மாணவி மறு நாள் தனது ஆசிரியை ஒருவரிடம் இவ்விடயத்தை தெரிவித்தையடுத்து, அந்த மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மாணவியின் சித்தி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதனை அறிந்த சந்தேகநபர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொலிஸார் அவரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30

01 2012

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும்! கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானம்

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற யோசனை கிழக்குமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அதன் பிரதி ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாணசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லாமல் வீடுகளை பராமரிக்கும் பணிகளை மாத்திரமே மேற்கொள்ளமுடியும் என்று குறித்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான காணிகள், ரயில்வே, பாதுகாப்பு படை, வனத்துறை மற்றும் மஹாவலி அதிகார சபை ஆகியவற்றின் கீழ் வருகின்றன.

இந்தநிலையில் உல்லாசத்திட்டங்களுக்கான காணிகள் யாவும் கிழக்குமாகாண சபையின் அனுமதியின்றியே வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை நிறைவேற்றப்பட்ட யோசனையில் பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது சுவிட்ஸர்லாந்து விஜயத்தை மேற்கொண்டுள்ள கிழக்குமாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் நாடு திரும்பியதும் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர் சம்பந்தனுடன் பேசவுள்ளதாகவும் குறித்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் மாகாணசபை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

29

01 2012

கலாம் ஏன் கிழக்குக்கு விஜயம் செய்யவில்லை?- கிழக்கு மக்கள் கவலை

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்யாமை தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள் கவலையடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் தெரிவித்துள்ளார்.இந்திய உயர்ஸ்தானிகரகம், அப்துல் கலாமை ஏன் கிழக்கு மாகாணத்துக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு அப்துல் கலாமை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட போதும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.

இது கிழக்கு மாணவர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்புமிக்க மனிதர் ஒருவரை தாம் சந்திக்க முடியாமல் போனமை, கவலையளிப்பதாக கிழக்கு மாகாண மக்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

29

01 2012

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

29

01 2012

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அரசியல் தீர்வு குறித்து முக்கிய உரை

மாசி மாதம் 6ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர தினத்தை ஒட்டிய சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரை ஒன்றினை ஆற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை சாவகச்சேரி செல்லும் அவர் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கான விடுதிக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார்

28

01 2012

கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் கண்டனம்

அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சரை சம்பந்தப்படுத்தி இழிவான செய்தி ஒன்றை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டிருந்தது. இதனைக் கண்டிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக் கழக பழைய மாணவர் ஒன்றியம் தமிழ் வின் இணையத்தளத்தின் உரிமையாளருக்கு ஓர் கடிதத்தினை எழுதியிருந்தது.

அக் கடிதம் வருமாறு.

அன்பின் தமிழ்வின் இணையத்தள நிர்வாகிக்கு.

உங்கள் இணையத்தளத்தில் 26.01.2012 அன்று கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்!- கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் எனும் தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்.

எமது கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பமைய மாணவர் சங்கத்தால் தமிழ்வின் இணையத்தளத்திற்கோ அல்லது வேறு இணையத்தளங்களிற்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான அறிக்கையும் அனுப்பப்படவில்லை இருந்தபோதும் உங்கள் இணையத்தளத்தில் எமது பெயரினைப் பயன்படுத்தி மக்களை குழப்பமடையச் செய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டமையை இட்டு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தால் அந்த நாளை துக்க நாளாக எமது கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர்சங்கம் பிரகடனப் படுத்தவில்லை. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மீண்டும் மீண்டும் எமது மக்களை போலிப் பிரச்சாரங்களும் போலி அறிக்கைகள் மூலமும் குழப்பமடையச் செய்து அரசியல் இலாபம் தேட நினைக்காதீர்கள்.

உங்களால் வெளியிடப் படுகி்ற அறிக்கைகள் அனைத்தும் எமது சங்கத்தின் பெயரில் வெளியிடப்பட்ட போலி அறிக்கை போன்று போலியான அறிக்கைகள்தானா? இனிமேலாவது இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளைச் செய்யாதீர்கள். எதற்காக எமது சங்கத்தின் பெயரில் போலி அறிக்கையினை வெளியிட்டடீர்கள் என்பதனை சொல்ல முடியுமா?

ஊடகம் எனும் போர்வையில் இனிமேலாவது கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம்.

செயலாளர்
வி.குணாளன்
பழைய மாணவர்சங்கம்
கிழக்கு பல்கலைக்கழகம்

28

01 2012

சிங்கள உபவேந்தர் நியமனத்தை எதிர்த்து கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்கவேண்டுமென்று கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.விரிவுரைகளை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இன்று நண்பகல் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி கவனஈர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

”வேண்டாம் … வேண்டாம் மீண்டும் பதில் உபவேந்தர்”,

”வேண்டும் .. வேண்டும் நிரந்தர உபவேந்தர்”,

“உயர்கல்வி அமைச்சரே! கவுன்சில் சிபார்சு செய்த உபவேந்தர் நியமனம் எங்கே?”

உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு தமிழிலும் சிங்களத்திலும் கோசங்களை எழுப்பினர் கிழக்குப் பல்கலைக் கழக கவுன்சில் உறுப்பினரான பேராசியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக என்பவரே உயர்கல்வி அமைச்சரினால் குறித்த பதவிக்கு நியமிக்ப்பட்டுள்ளார்.

தமது இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பல்கலைக் கழக மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் “ பல்கலைக் கழகத்திற்கு புதிதாக கவுன்சில் நியமிக்கப்பட்டு கவுன்சிலினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

நிரந்தர உபவேந்தர் விரைவில் நியமிக்கப்படவேண்டிய இந்நேரத்தில் பதில் உபவேந்தராக புதியவரொருவர் நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பதில் உபவேந்தவராக தற்போது பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர் கவுன்சில் உறுப்பினராக உள்ளார்
அது மட்டுமின்றி நிரந்தர உபவேந்தர் பதவிக்கு கூட இவரது பெயர் சிபாரிசு செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் மீண்டும் பதில் உபவேந்தராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பொருத்தமற்றதாகவே நாம் கருதுகிறோம்தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அல்லது சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

28

01 2012

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 6 மாணவர்கள் காயம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் ஆறு மாணவர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவலடி, நாமகள் வித்தியாலயத்துக்கு இன்று காலை சத்துருக்கொண்டானில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து மாணவர்களை ஏற்றுச்சென்றவேளை இவ்விபத்து நேர்ந்துள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்றதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

26

01 2012