Reality, Ability, Genuine, Unity — உண்மை, ஆற்றல், நேர்மை, ஒற்றுமை.

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது’: மகிந்த

 
3வது போர் வெற்றி விழாவில் ஜனாதிபதி மகிந்த

3வது போர் வெற்றி

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் மூன்றாவது ஆண்டு வெற்றிவிழா மேடையில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியுடன் முடிவுக்கு வந்தததாக அறிவிக்கப்பட்ட இலங்கைப் போரின் வெற்றி விழாக் கொண்டாட்டம் இந்த ஆண்டும் கொழும்பு காலி முகத்திடலில் பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்டது.
வடக்கில் மக்களின் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதில்லை என்று இங்கு கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ‘இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள், வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் ஈழம் கோருவதை இன்னும் கைவிடவில்லை என்பதை உணரவேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

நிலமை வழமைக்குத் திரும்பிவிட்டது என்பதற்காக வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதால் தேசிய பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தலை குறைக்க முடியாது என்றும் ராஜபக்ஷ கூறினார்

20

05 2012

‘நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை அமலாக்கலை பகிரங்கப்படுத்த வேண்டும்

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக அரசுத்துறையின் சார்பில் பேசவல்ல

ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க அர்சுத்துறையின் சார்பில் பேசவல்ல விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக மேலும் பேசிய அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தல், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்கள் நம்பிக்கையை பலப்படுத்தல், நாட்டின் ஆற்றுப்படுத்தலை வேகப்படுத்தல் ஆகியவற்றுக்காக, நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் மாத்திரமல்லாமல், பொறுப்புக்கூறல் விடயத்திலும் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நடவடிக்கைகள் தேவை என்று ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை நல்ல திட்டம் என்று கூறிய ஹிலாரி அவர்கள், அதனை பகிரங்கப்படுத்தியாக வேண்டும், உங்கள் மக்களுக்கும் உலகுக்கும் தெரிவித்தாக வேண்டும், நல்ல ஆக்கபூர்வமான அமலாக்கல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறியதாகவும் நுலண்ட் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாது செய்தல், வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துதல், ஊடகங்களுக்கான பாதுகாப்பு உட்பட மனித உரிமைகளைப் பாதுகாத்தல், போன்றவற்றையும் அவர் வலியுறுத்தியதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

நாற்பதினாயிரம் பொதுமக்கள் போரில் இறந்ததாக சுட்டிக்காட்டிய சில செய்தியாளர்கள், அந்த போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா இலங்கை அமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்தியதா என்று கேட்டதற்கு பதிலளித்த அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளர், பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் அவர் அதனையே பொதுவாக வலியுறுத்தியதாகவும், இந்த விடயங்கள் குறித்து ஏனைய அரசுத்துறையின் அதிகாரிகள் இலங்கை குழுவுடன் விபரமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறினார்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக அமெரிக்க அரசுத்துறை செயலருடன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள், போரின் பின்னரான நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கணிசமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள இரானிடம் மசகு எண்ணெய்க்காக தங்கியிருப்பதை குறைப்பதில் இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து ஹிலாரி கிளிண்டனுடன் அமைச்சர் பீரஸ் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் அரசுத்துறையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

20

05 2012

புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு வைகோ எதிர்ப்பு

த்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பாதீர்கள் என்று பிரதமருக்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு அனுப்புவதென, இந்திய அரசு, இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு, புத்தரின் பெயரை உச்சரிக்கும் தகுதி கிடையாது.

இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்புவது, உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களைப் புண்படுத்தும் செயல் ஆகும். எனவே, இதைத் தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதே கடிதத்தை, ‌பீகார் மாநில முதல்வ‌ர் நிதீஷ்குமார், பா.ஜ.க. மூ‌த்த தலைவர் எல்.கே. அத்வானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கும் வைகோ அனுப்பி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

20

05 2012

இரு தசாப்தங்களின் பின்னதான சாதனைகள்! மியன்மாருக்கான பொருளாதார தடை நீங்கியது

மியன்மார் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

மியன்மாரில் ஏற்பட்டுவரும் ஜனநாயக மாற்றங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 22 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மியன்மாருக்கான அமெரிக்கத் தூதுவரும் பெயரிடப்பட்டுள்ளார்.

மக்களால் தெரிவுசெய்யப்படும் அரசாங்கம் ஒன்றின் செயற்பாடுகளுக்கு மியன்மாரில் தற்போது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது.

எனினும் இராணுவத்தின் தலையீடு அரசாங்கத்தினுள் செல்வாக்குச் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

19

05 2012

பின் தங்கிய மாணவர்களுக்கு கிழக்கு முதல்வரினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

மிகவும் பின்தங்கிய நிலையில் தமது கல்வியை தொடரும் மாணவர்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

19

05 2012

தென்மாகாணசபை பிரமுகர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம்

முதன்முறையாக தென்மாகாணசபையின் தவிசாளர், மாகாண அமைச்சர்கள், எதிர்க்;கட்சி தலைவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்த இக்குழுவினரை மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் வரவேற்றனர்.

தற்போதைய சமாதான சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள், இம்மாவட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறியவும் கிழக்கு மற்றும் தென்மாகாண மக்களுக்கிடையில் சிநேகபூர்வ நிலைமையை ஏற்படுத்துவதுமே இவ்விஜயத்தின் நோக்கமென தென்மாகாணசபைத் தலைவர் கே.ஏ.சோமவன்ஸ தெரிவித்தார்.

தென்மாகாணசபைத் தவிசாளர் கே.ஏ.சோமவன்ஸ, தென்மாகாண விவசாய அமைச்சர் விஜய வீரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் விஜயவிக்ரம, பிரதித் தலைவர் கம்லி விதானாராச்சி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்
கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிளை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாணசபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கே.அமலநாதன் கிழக்கு மாகாண செயலாளர் கே.பாஸ்கரன் மாநகர ஆணையாளர் க.சிவநாதன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இன்று (18.05.2012) இரவு மேற்படி மட்டக்களப்பிற்கு வியம் செய்துள்ள தென் மாகாண சபை உறுபக்பினர் குழாமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

19

05 2012

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கான இலங்கை துணைத்தூதரக அலுவலகம் சென்னை டி.டி.கே நகர் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. பாரியளவில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வங்கிக் கிளை, ஸ்ரீ மஹாபோதி நிலையம் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை சென்னை மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

19

05 2012

யாழ்.பல்கலை துணைவேந்தர் அலுவலகம் மாணவர்களால் சுற்றிவளைப்பு! உருவப்படம் எரிக்கப்பட்டு கல்வீச்சு

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.

இதனைக் கண்டித்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள்.

19

05 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.

19

05 2012

இயேசுவின் காலில் இருந்து வந்த நீரால் ஏற்பட்ட சர்ச்சை

இந்தியாவின் மும்பை நகரில் இருக்கும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் உள்ள இயேசு கிறிஸ்து சிலையின் கால்களில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்ததும் அந்த நகரில் இருக்கும் கத்தோலிக்கர்கள் அதிசயித்துப்போனார்கள்.

இந்த நிகழ்வானது நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிலையின் பாதத்தை நோக்கி தினசரி குவியவைத்தது. இந்த தண்ணீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தேவாலயத்தின் இந்த கருத்தை நம்ப மறுத்த இந்தியர் ஒருவர் இதை கேள்விக்குள்ளாக்கினார். விளைவு, இந்த அதிசய நிகவு அவருக்கு சட்ட நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் இருக்கும் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலான இயேசு கிறிஸ்துவின் கால் விரல்களிலிருந்து திடீரென தண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிசயித்த கிறித்துவை நம்புபவர்கள் இதை உடனே அற்புதம் என்று வர்ணித்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த சிலையைச்சுற்றி தினசரி கூட்டம் கூடத்துவங்கியது.

இந்த தண்ணீரை சேகரித்துக் குடித்த பக்தர்கள் இதற்கு அற்புத சக்திகள் இருப்பதாக தெரிவித்தார்கள். மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை பலவகையான நோய்களையும் இந்த தண்ணீர் குணப்படுத்த வல்லது என்றெல்லாம் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலே இருந்தது.

இந்த நிலையில், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பத்திரிகையாளருமான சணல் எடமருகுவுக்கு மட்டும் இதில் சந்தேகம் எழுந்தது. கடவுள் அருள் என்பதை அவர் நம்பவில்லை. அந்த இடத்திற்கு நேரில் சென்ற அவர் அங்கே ஒருமணிநேரம் ஆய்வு செய்து ஒரு உண்மையை கண்டுபிடித்தார். அந்த சிலைக்கு அருகில் இருந்த கழிவறையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர்தேங்கியதையும், அப்படி தேங்கிய தண்ணீரே இந்த சிலையின் கால் வழியாக கசிந்ததாக அவர் நிரூபித்தார்.

சணல் எடமருகு

சணல் எடமருகு

தனது இந்த கண்டுபிடிப்பை அறிவித்தபோது, கத்தோலிக்க மதத்தலைவர்கள், தனக்கு எதிராக மத நிந்தனை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு பதியுமாறு காவல்துறையிடம் கோரியதாக சணல் எடமருகு பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கு இந்திய கத்தோலிக்கர்களை பிளவு படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை இடமருகு சந்திக்கவேண்டும் என்றும் குறைந்தது கிறித்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியமைக்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஒரு சாரார் கோருகிறார்கள். ஆனால் மற்ற தரப்பினரோ, சணல் இடமருகுவை விமர்சிப்பவர்கள் மத அடிப்படைவாதம் பேசும் முஸ்லிம்களைப்போல நடந்துகொள்வதாகவும், எதிர்கருத்தை விவாதிக்க மறுப்பதாகவும் கூறுகிறார்கள்.
தொடர்ந்து மதத்தலைவர்களை எதிர்த்து கேள்விக்குள்ளாவதிலும், அற்புதங்களை செய்து நோய்களை குணமாக்குவதாக கூறும் ஏமாற்றுப் பேர்வழிகளின் சாயத்தை வெளுக்கச் செய்வதிலும் எடமருகு பேர்போனவர்.

தற்போது அவர் இந்திய மதநிந்தனை சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று முயற்சி எடுக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். நியாயமான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் மதசார்பற்றத்தன்மை இந்திய அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆழமான மத நம்பிக்கைகள் தொடர்பான விவாதங்களும் மோதல்களும் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து எப்போதும் விலகியிருந்ததில்லை.

18

05 2012